கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறையினர் வனவிலங்கு வேட்டை தடுப்பு நடவடிக்கை:

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் முனைவர் அ. அன்பு இ.வ.ப அவர்களின் உத்தரவின்படி, உதவி வனப் பாதுகாவலர்கள் திரு. ஸ்ரீவல்சன் மற்றும் திரு. நிதின் இ.வ.ப. ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திரு. ந. அன்பழகன் அவர்கள் தலைமையில், பூதப்பாண்டி மற்றும் அழகிய பாண்டியபுரம் வனச்சரகங்களின் சிறப்பு படையினர் கூட்டு தணிக்கையில் தீவிர ரோந்து மற்றும் வனக் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஏற்கனவே ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், தெற்குமலை காப்புக்காடு அருகே கோட்டக்கரை காப்பு நிலத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டம் அட்டவணை -I ல் இடம்பெற்றுள்ள வனவிலங்கான கடமான் (மிளா), அவுட்டுக் காய் எனும் நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாட பட்டு, இவ்விலங்கின் இறைச்சி விற்பனை செய்த மேலும் ஒரு குற்றவாளியான கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுக்கா, காட்டுப்புதூரைச் சேர்ந்த தருமராஜ் மகன் டி. ராஜன், வயது 36 என்ற குற்றவாளி, தான் வேட்டையாட பயன்படுத்திய அவுட்டுக் காய் எனும் நாட்டு வெடிகுண்டு மற்றும் ஈட்டியுடன் வனத்துறையினரால் குற்ற புலனாய்வு செய்து கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி, கனம் வன வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் முன்பு ஆஜர் படுத்தப் பட்டு நீதிமன்ற காவலில் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையிலும், வனக் குற்றங்கள் மற்றும் வனத் தீ ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் வனத்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வனக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

