
திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில், திமுக நிர்வாகி பி.டி. அரசகுமார் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, சட்டசபையில் அன்பில் மகேஷ் மீது நிதியமைச்சர் மரியவில்சன் லஞ்சப்புகார் கூறியிருந்தார். இந்நிலையில், திருச்சி தென்னூரில் உள்ள முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை உட்பட 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அரசகுமாரிடம் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுடன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றன.
இந்த சோதனை தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து போலீசார் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வேண்டியுள்ளது.

