
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தென்னை விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதனை சார்ந்து தென்னை நார் மற்றும் கயிறு உற்பத்தி உள்ளிட்ட தொழில்களும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் கயிறுகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மேட் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையியல், கடந்த சில ஆண்டுகளாக கயிறுக்கு உரிய விலை கிடைக்காததால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மூலப்பொருட்களின் விலை, மின்கட்டணம் மற்றும் இயந்திர உதிரிபாகங்களின் விலை உயர்வால் உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப கயிறுக்கு விலை கிடைக்காததால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனால், பொள்ளாச்சியில் கயிறு கொள்முதல் மையம் அமைத்து உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் வழங்கப்படுவது போன்று தமிழகத்திலும் மூலப் பொருட்களுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும் என கயிறு உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தொடர் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், கயிறு தொழிலுக்கென தனி வாரியம் அமைத்து அரசு ஆதரவு வழங்க வேண்டும் என கயிறு உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.




