கோக்கு மாக்கு
Trending

சட்டவிரோத மாடுகள் போக்குவரத்து கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் , விலங்குகள் வதை தடுப்பு சங்கம் – 3 மாடுகள் பலி

கடந்த 12.03.2026 அன்று காலை திண்டுக்கல் மாவட்டம் , செம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திண்டுக்கல் – தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் ஊருக்கு அருகே ஆந்திராவில் இருந்து கேரளா மாநிலத்திற்கு 28 மாடுகளை ஏற்றிச்சென்ற கண்டைனர் வாகனம் ஒன்று சாலையை விட்டு கீழே இறங்கி சாய்ந்தது.

இந்த சம்பவத்தில் மூன்று மாடுகள் இறந்ததுடன் மேலும் பல மாடுகள் காயமடைந்தன. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதி பொதுமக்கள் துணையுடன் வாகனத்தில் இருந்து அனைத்து மாடுகளையும் மீட்டு வெளியேற்றினர். 

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த முகமதுஅலி என்பவர் விலைக்கு வாங்கி அதே கம்பம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரை ஓட்டுநராக வைத்து கன்டைனருடன் கூடிய EICHER (TH-54-L-8806) வாகனம்  ஒன்றில் ஆந்திராவில் இருந்து கேரளா மாநிலத்தில் பல ஊர்களில் உள்ள மாட்டு இறைச்சி கூடங்களில் விற்பனை செய்யும் நோக்கத்தில் இந்த 28 மாடுகளையும் கொண்டு சென்றுள்ளனர் என தெரிய வருகிறது. 

விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 1960- ல் உள்ள விதிகளின் படி இந்த விபத்தில் சிக்கிய வாகனத்தில் எட்டு மாடுகள் மட்டுமே ஏற்ற வேண்டும். அது மட்டுமல்லாது காயமடைந்த உடல் நலமில்லாத மாடுகளையும் ஏற்றிவர கூடாது. மேலும் அனைத்து மாடுகளுக்கும் தனித்தனி மருத்துவ சான்றிதழ் பெற்ற பின்னர் தான் வாகனத்தில் ஏற்ற வேண்டும், வாகனத்தில் மாடுகளுக்கு தேவையான தீவனங்கள் தண்ணீர் மற்றும் மருத்துவ முதலுதவி மருந்துகள் தேவையான பணியாளர்கள் உட்பட பல்வேறு விதிகள் உள்ளது.

 இது எதுவுமே விபத்து நடந்த வாகனத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சட்டவிதிகளை மீறி மாடுகளை கடத்துவதற்காகவே இது போன்ற கண்டைனர்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த வகை கண்டைனர்களில் மாடுகள் உள்ளே இருப்பது தெரியாமல் இருக்க சுற்றிலும் அனைத்து பாகங்களும் அடைக்கப்பட்டு மேல் பகுதியில் மட்டும் சிறிய திறப்பு ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். 

  இதுபோன்ற கால்நடைகளுக்கு ஏற்படும் சித்திரவதைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை தலைவராகவும் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை துணை தலைவராகவும் மாவட்ட கால்நடைகள் பராமரிப்புத்துறையின் கட்டுப்பாட்டில் தொண்டு நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கம் என்கின்ற பெயரில் 2007-ம் ஆண்டு பதிவு செய்து 13 பேர் ஆய்வாளர் , உதவி ஆய்வாளர் பதவிகளில் நியமிக்கப்பட்டு தற்போது 9 பேர் பணியாற்றி வருகின்றனர்.  

மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்க ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளர்கள் அனைவரையும் கண்காணிக்க , தினந்தோறும் இவர்களுக்கான பணி ஒதுக்கீடு , வழக்கு பதிவு விவரங்கள் என எதுவும் சீருடை பணியாளர் விதிகளின் படி பராமரிக்கப்படுவதில்லை. 

 ஆனால் காவல் , வனதுறை போன்ற சட்ட அமலாக்க மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுக்கு நிகரான / தோற்றத்தை  போன்ற காக்கி நிற சீருடை அணிய அனுமதித்துள்ளனர். இவ்வளவு இருந்தும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வாரம்தோறும் திண்டுக்கல் மாவட்டத்தை கடந்து செல்கின்றன எந்த வித சோதனை மற்றும் தண்டனைகள் இல்லாமல்.

இது போன்று கண்டைனர் வாகனங்களில் சட்ட விதிகளை மீறி மாடுகள் கொண்டுசெல்லப்படுவதாக கடந்த 20/11/2025 அன்று அனைத்து விபரங்களுடன் செய்தி ( https://visilmedia.in/28479/  ) வெளியிட்டிருந்தோம்.

இதே போன்று 29/05/2025 அன்றைய தேதியில் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்க செயல்பாட்டில் உள்ள முறைகேடுகள் மற்றும் சங்கத்தில் உள்ள ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளர்கள் சிலருக்கு சலுகை வழங்க கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் செய்துள்ள பித்தலாட்டங்களையும் ஆதாரங்களுடன் செய்தி ( https://visilmedia.in/27291/ ) வெளியிட்டிருந்தோம்.

இவ்வளவவு விஷயங்களையும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததின் காரணமாகத்தான் இந்த விபத்து நடந்து அதில் மூன்று மாடுகளும் இறந்து மேலும் பல மாடுகள் காயமடைய காரணம் என்று விலங்குகள் னால ஆர்வலர்கள் கூறுகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button