
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் பூர்வீக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் மகுரா மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷகிப் அல் ஹசனின் பூர்வீக வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் கற்களை வீசி ஜன்னல்களை சேதப்படுத்தியதுடன், வீட்டிற்கு தீ வைக்கவும் முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது உடனடியாக தெரியவில்லை என்றும், இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடுகடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்ற நிகழ்ச்சியில் ஷகிப் அல் ஹசன் கலந்து கொண்ட சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதால், இது அரசியல் பின்னணியுடன் தொடர்புடையதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.