
திருப்பூரில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 500 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மிதுன் தாமஸ் மற்றும் திண்டிவனத்தைச் சேர்ந்த சங்கர் புத்திரன் ஆகிய இருவரும் 2024-ஆம் ஆண்டு சென்னையில் “இன்ஃபினிட் ஃபியூச்சர் லிமிடெட்” என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி விளம்பரங்களை பரப்பியுள்ளனர். இந்த விளம்பரங்களை நம்பி 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஒரு லட்சம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் மிதுன் தாமஸ் மற்றும் சங்கர் புத்திரன் தலைமறைவாகி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.