
நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்த வாசன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பிரதாபராமபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரம் கிடந்த சிமெண்ட் கட்டை மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த வாசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வாசனை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாசனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பிரகாஷிற்கு ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அடுத்தடுத்து விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
