
கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் உத்தரவின்படி, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நடத்திய சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 21 டன் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்போது, போதை பொருள்களை அழிக்கும் பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 9 நிரந்தர மற்றும் 6 தற்காலிக சோதனைச் சாவடிகள் மூலமாக போதை பொருள் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகும் கூறியுள்ளார். மேலும், பள்ளிகளைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு புகையிலையற்ற மண்டலமாக அறிவிக்கப்பட்டு, எந்தவித புகையிலைப் பொருட்களும் விற்பனை செய்யப்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுவரை விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டமானது கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதாலும், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய வழியில் இருப்பதாலும், காவல்துறையினர் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தப்பட்டு தனியார் கார்கள் மட்டுமின்றி, பேருந்துகள், கொரியர் நிறுவனங்களிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் போதைப்பொருள் புழக்கம் குறித்து தகவல்களைத் தெரிவிக்க Drug Free TN செயலி மூலம் தகவல் அளிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.




