
மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து, தமிழக எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து, தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில், கன்னட சலுவளி வாட்டாள் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வாட்டாள் நாகராஜ், மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்ந்தால், தமிழக-கர்நாடக எல்லையை நிரந்தரமாக மூடும் போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து, கர்நாடகாவில், தமிழ் படங்களை திரையிட விடாமல் முமுமையாக தடை விதிக்க நிலை ஏற்படும் என எச்சரிக்கைவிடுத்த அவர், கர்நாடகாவில் வாழக்கூடிய தமிழர்கள், மேகதாது திட்டத்தை எதிர்க்க கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுத வேண்டும் என பேசினார். மேலும், மேகதாது திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகம் முன் சத்தியாகிரக போராட்டம் நடத்தவோம் எனவும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, போராட்டக்காரர்கள், ஓசூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டு தமிழ்நாட்டை நோக்கி பேரணி செல்ல முயன்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 65 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

