க்ரைம்
Trending

ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி முத்தம்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக இப்பகுதி கிராம மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த முத்தம்பட்டி கிராம மக்கள் தொப்பம்பட்டி, ஜாதி கவுண்டம்பட்டி, கொல்லப்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் மலை அடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் செல்லக்கூடிய முக்கிய சாலையில் பாறாங்கற்கள், மரம், காலி குடங்கள் உள்ளிட்டவைகளை சாலையின் குறுக்கே வைத்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் பத்துக்கு மேற்பட்ட தங்களது இரு சக்கர வாகனங்களையும் சாலையின் குறுக்கே நிறுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து முத்தம்பட்டி வழியாக அடுத்த கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உடனடியாக அம்பாத்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பாத்துறை போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் மேலும் வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதை அடுத்து கிராம மக்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாறாங்கற்கள், மரம், காலி குடங்கள் உள்ளிட்டவைகளை அகற்றி போக்குவரத்து சரி செய்தனர்.

ஊராட்சி நிர்வாகம் மேலும் குடிநீர் முறையாக வழங்கவில்லை என்றால் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர். கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை இருந்து வந்தது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button