
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சிங்கப்பெருமாள் கோவில் பகுதிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் இரவு 8:30 மணியளவில் அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது பயணிகள் அனைவரும் இறங்க வேண்டிய சிங்கப்பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் அதிவேகமாக இயக்கியுள்ளார். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் நிற்காமல் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணும், அவரது குடும்பத்தினரும் வண்டியை நிறுத்த கூறியும், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலத்தின் மீதே பேருந்தை நிறுத்தி அனைவரையும் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, இரவு நேரத்தில் ஆள்நடமாட்டமற்ற மேம்பாலத்தில் பெண்களையும் குழந்தையையும் இறக்கிவிட்டது குறித்து அந்தப் பெண் ஓட்டுநரிடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநர் அவதூறான வார்த்தைகளால் பேசி தகாத முறையில் நடந்துகொண்டதாகக் அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து, எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் எங்களுக்கு நடந்தத போன்ற ஒரு பயங்கர அனுபவம் இனி வேறு எந்தப் பெண்ணுக்கும் எந்தக் குடும்பத்திற்கும் நடக்கக் கூடாது என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.


