திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய வீராணம் பகுதியில் “ரகசிய ஆபரேஷன்”…

முயல்களை வேட்டையாடத் திட்டம் தீட்டி, ஆயுதங்களோடு சுற்றிக்கொண்டிருந்த 12 பேர் கொண்ட கும்பலை, வனத்துறையினர் அதிரடியாகச் சென்று கையும் களவுமாகத் தூக்கியுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம் அருகே வீராணம் பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குளம் வனச் சரக அலுவலர்கள் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சிலர் முயல் வேட்டையாட வனப்பகுதியில் சுற்றித் திரிந்து கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் கருவந்தா பகுதியைச் சேர்ந்த கண்ணன் (36), தாமஸ் (68), மாரிச்செல்வம் (23), மரியசெல்டன் (19)
வீராணம் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் (27), ராஜகோபாலப்பேரியைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் (41), காவேரி செல்வம் (22), கோவிந்தப்பேரியைச் சேர்ந்த தினேஷ் (20), முத்துகிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த பண்டார மணிகண்ட பிரபு (27),
அச்சங்குட்டம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி (50), லிங்கம் (46),
மாயமான்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. பிடிபட்ட 12 பேரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில், நபர் ஒருவருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தமாக ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.