செய்திகள்

கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சமாட்டேன் – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது தஞ்சாவூரில் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தனது தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பேசியதற்காக, அரசு இரவோடு இரவாக காவல்துறையை அனுப்பி தன்னை வீட்டிலேயே கைது செய்ததாகக் குறிப்பிட்டார். காவிரி பிரச்சினை மற்றும் அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து காரசாரமாக பேசியதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய அவர், இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு தாம் அஞ்சப்போவதில்லை eன்று கூறியுள்ளார். மேலும், திமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் காவல்துறையினர் தனது வாகனத்தை செங்கிப்பட்டி நோக்கித் திருப்பிச் சென்றதாகவும், பின்னர் நீதிமன்றத்தில் அரசு பின்வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார். டெல்டா மண்டலம் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலுவான கோட்டையாகத் திகழும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தற்போதைய ஆட்சியில் 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எந்தக் காரும் தேவையில்லை என்றும், அந்த நிதியை விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமையுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500, கேஸ் சிலிண்டர் மானியம், வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது, அமைச்சர்கள் உரிய பதில் அளிக்காமல் பிரச்சினையைத் திசைதிருப்புவதாகவும் கூறியுள்ளார். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு 11.19 சதவீத வளர்ச்சியுடன் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசு மாநிலத்தின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும் மக்கள் விரைவில் இந்த ஆட்சியாளர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button