அரசியல்

கட்சி நிதி என்ற பெயரில் 7.5% முதல் 10% வரை கமிஷன் – முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் பெறப்பட்டதாகவும், கட்சி நிதி என்ற பெயரில் பெறப்பட்ட தொகையின் பயனாளர்களாக அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் அமலாக்கத்துறை அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் இன்று குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து, சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், கடந்த வாரம் தனது மேசையில் மூன்று துறைகள் தொடர்பான கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்று கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார். பின்னர், எதிர்க்கட்சியினர் சவால் விடுத்த நிலையில், அதற்கு முன்பாக சில விவரங்களை சாம்பிளாக பார்ப்போம் எனக் கூறி திமுக ஆட்சிக்காலம் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்வைத்தார். இதையடுத்து, 1970-களில் திமுக ஆட்சியின் போது நடைபெற்ற வீராணம் திட்டத்தில், சத்யநாராயண பிரதர்ஸ் நிறுவனத்தின் டெண்டருக்கு 2.5 சதவீதம் கமிஷன் கேட்கப்பட்டதாகவும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டார். மேலும், அரசு ஒப்பந்தங்களில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் பெறப்பட்டதாகவும், பார் உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து, மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்பட்டதாகவும், இதனை முறையாக செய்யப்பட்ட ஊழல் என்றும் விமர்சித்தார். அதன் பின்பு, திமுக ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் விஞ்ஞான முறையில் மேற்கொள்ளப்பட்டதாக விமர்சித்த முதல்வர் விஜய், திமுக இருக்கும் இடத்தில் தப்பே நடக்கும் தப்பு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும் என கடுமையாக விமர்சித்தார். இதை தொடர்ந்து, கரூர் கேங்க் எனக் குறிப்பிடப்படும் குழு தொடர்பாகவும் கேள்வி எழுப்பிய அவர், குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் இருப்பதாக கூறப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து, திமுக ஆட்சிக் காலத்தில் திமுகவினர் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் செய்யப்பட்டதாகவும், பெண் காவலரிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார். பெண் காவல் ஆய்வாளரை தாக்கியதாக கூறப்படும் திமுக பிரமுகர் மற்றும் அவரது மனைவி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், கடலூர் திமுக எம்.பி. ரமேஷின் ஆலையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் கடுமையான கண்டனங்களுக்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் கண்ணாடியை பாருங்கள் என்று திமுகவினருக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் விஜய், தவெகவை சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார். ஆனால், திமுக ஆட்சியில் திமுகவினர் அனுமதி பெற்ற பிறகே வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பலர் பாதுகாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதற்கு முன் திமுகவினர் தங்களது ஆட்சிக் காலத்தை திரும்பிப் பார்க்க வேண்டும் என்றும், திமுக செய்த தவறுகளை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை என்றும் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button