
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள குருக்களாண்டார்பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் மீனாவுக்கும், பொன்ராஜுக்கும் இடையே சம்பவத்தன்று வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், கடையநல்லூர் போலீஸ் குடியிருப்பு அருகே மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பொன்ராஜ், மீனாவை தாக்கியதாகவும், தாக்குதலின் போது பாலியல் ரீதியாக தாக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீனா கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பொன்ராஜ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் இரு போலீசாருக்கு இடையே ஏற்பட்ட தகராறு, பெண் போலீஸ் தாக்கப்பட்டு தலைமை காவலர் கைது செய்யப்படும் அளவுக்கு சென்றிருப்பது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தலைமை காவலர் பொன்ராஜை சஸ்பெண்ட் செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்துக்கான பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையே ஏற்கெனவே தனிப்பட்ட விரோதம் இருந்ததா அல்லது பணியின்போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சம்பவம் நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.