
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பாக பல்வேறு முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.
உறுப்பு மாற்று என்பது முக்கியமான மருத்துவ சேவை என்றும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஏராளமானோர் பதிவு செய்து காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது போல, மருத்துவத் துறையிலும் உறுப்பு மாற்று பிரிவு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து, காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், உறுப்பு மாற்றத்தை வணிகமாக மேற்கொள்வதை அரசு அனுமதிக்காது என்றும் அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
இதை தொடர்ந்து திமுகவை விமர்சித்த அவர், திமுகவினரைப் பார்த்தாலே ஊழல் தான் ஞாபகம் வரும் எனக் கூறினார். மேலும், திமுக முன்னாள் அமைச்சர்கள் பிரசாரத்திற்கு வரும்போது அவர்கள் செய்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான விவகாரங்கள் மக்கள் நினைவுக்கு வரும் என்றும், அவர்களின் பிரசார வருகை தவெகவின் வெற்றியை எளிதாக்கும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

