செய்திகள்

2029க்குள் இந்தியாவில் போதைப்பொருள் புழக்கம் முற்றிலும் ஒழிப்பு – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்தியாவில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க 2029ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் தடுப்புப் படை தலைவர்களின் மாநாட்டில் பேசிய அவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாட்டிற்குள் ஒரு கிராம் போதைப்பொருள் கூட நுழையவோ, நாட்டிலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட வாரியாக தீவிரப்படுத்தப்பட்டு, முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

மேலும், உளவுத்தகவல் சேகரிப்பு, விசாரணை, நிதிசார் நடவடிக்கைகள் மற்றும் வழக்குத் தொடருதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்த மாநில அளவில் செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.

பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாக போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம் கடினமானதாக இருந்தாலும் அதை கைவிட முடியாது என்றும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து, 2029 டிசம்பர் 31க்குள் இந்தியாவில் போதைப்பொருள் புழக்கத்தை வேரறுக்கும் இலக்கை அனைவரும் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button