
கோவை மாவட்டம் கணபதி மாநகர் பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முக பாண்டியன். இவர் தனது மகள் கௌசல்யாவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார். இதை தொடர்ந்து, விக்னேஷ் டாக்டர் என்பதால் தொழிலதிபரான சண்முக பாண்டியன் விக்னேஷுக்கு கவுண்டம் பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் அரசு பணி வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் விக்னேஷ் அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு வேறு எந்த பணிக்கும் செல்லாமல் இருந்துள்ளார். அதே சமயம் விக்னேஷின் குடும்பத்தினர் அவர் திருமணத்திற்கு பிறகு காளப்பட்டி பகுதியில் உள்ள சண்முகபாண்டியனுக்கு சொந்தமான பங்களாவிற்கு குடிப்பெயர்ந்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சண்முகபாண்டியன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் விக்னேஷிடம் லாக்கர் மற்றும் பீரோ சாவியை கொடுத்து 1000 பவுன் நகைகளை பார்த்து கொள்ளும்படி அவர் கூறியுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் மற்றும் கெளசல்யாவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டு விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வேறு இல்லத்திற்கு குடிப்பெயர்ந்து சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து சண்முகபாண்டியன் லாக்கர் மற்றும் பீரோ சாவியை விக்னேஷிடம் கேட்ட பொழுது அதனை தருவதற்கு மறுத்து விட்டதால் லாக்கரை உடைத்து பார்த்த போது அதில் இருந்த நகைகள் காணாமல் போயிருந்ததால் சண்முகபாண்டியன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்பு சண்முகபாண்டியன் நகைகளை எல்லாம் திருப்பி கேட்ட போது வெறும் 100 பவுன் நகைகளை மட்டுமே விக்னேஷும் அவரது கும்பத்தினர் திருப்பி கொடுத்ததாகவும் மீதமுள்ள 900 பவுன் நகைகளை திருப்பி கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சண்முகபாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். மேலும் விக்னேஷின் தாய் மற்றும் அக்காவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

