
திருப்பூர் வனக் கோட்டம், ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் அமராவதி சரகத்தில், யானைத் தந்தங்கள் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு வனத்துறை மேற்கொண்ட துரிதமான மற்றும் திட்டமிட்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது.
அமராவதி நகர் அருகிலுள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி யானைத் தந்தங்கள், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வனத்துறையினரால் வெற்றிகரமாகப் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அமராவதி பிரிவு வன அதிகாரி திரு. செந்தில்முருகனின் WhatsApp எண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து இரண்டு யானைத் தந்தங்களின் புகைப்படங்கள் வந்துள்ளன.
அந்த எண்ணின் பின்னணியை முறையாகக் கண்டறிந்ததில், அது அமராவதி நகரைச் சேர்ந்த சக்தி என்பவருடையது என்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம், பாறை குடியிருப்பைச் சேர்ந்த சூர்யா என்பவர் அந்தப் புகைப்படங்களை அனுப்பியதாகத் தெரியவந்தது.
தொடர்ந்து சூர்யாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், பாறை குடியிருப்பைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தன்னைத் தொடர்புகொண்டு யானைத் தந்தங்களைப் புகைப்படம் எடுக்கச் சொன்னதாகத் தெரிவித்தார்.
மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் மூலம், அந்த மாரியப்பன் உடுமலைப்பேட்டை சரகத்தில் குழிப்பட்டி பீட்டில் பணியாற்றும் வனக் காவலர் என்பது கண்டறியப்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, முரண்பாடான தகவல்கள் கிடைத்த நிலையில், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வனப்பகுதியிலிருந்து தந்தங்களை எடுத்ததாகவும், அவற்றை பாறை குடியிருப்பைச் சேர்ந்த கண்ணிமுத்துவிடம் வழங்கியதாகவும் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து கண்ணிமுத்துவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம், யானைத் தந்தங்கள் அமராவதி நகரில் மீன் கடை நடத்தி வரும் விஜயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட சட்டபூர்வமான சோதனையில், விஜயகுமாரின் வீட்டிலிருந்து இரண்டு யானைத் தந்தங்களும் வெற்றிகரமாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள்:
A1 – ஏ. மாரியப்பன் (49)
உடுமலைப்பேட்டை சரகத்தின் குழிப்பட்டி பீட்டில் வனக் காவலராகப் பணியாற்றுபவர்.
A2 – கண்ணிமுத்து (52)
தினக்கூலி தொழிலாளி.
A3 – ஆர். விஜயகுமார் (29)
9/6 சோதனைச் சாவடி பகுதியில் மீன் கடை நடத்தி வருபவர்.
