
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி துாய்மை பணியாளர்கள் சதுரங்காடி காந்தி சிலை பகுதியில் இருந்து காலை 10.30 மணிக்கு பேரணியாக புறப்பட்ட அவர்கள், ஸ்டேட் வங்கி வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, கிளைத் தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தி முழுமையான மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அங்கு வலியுறுத்தப்பட்டன. மேலும், வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்ததாக கூறப்படும் தனியார் நிறுவனம் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, பணி கருவிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கு உணவு இடைவேளை, கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தருவதுடன், கொரோனா காலத்தில் அரசு அறிவித்த ஊக்கத்தொகையையும் வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலர் கருப்பண்ணன், உள்ளாட்சி சங்க மாவட்டச் செயலர் கோவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நகராட்சி ஒப்பந்த பெண் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
