
ஊட்டி அருகே கேத்தி பேரூராட்சி வார்டு பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, செயல் அலுவலர் புவனேஸ்வரி தலைமையில், மன்ற உறுப்பினர்கள் வார்டு வாரியாக சென்று பொதுமக்களுக்கு குப்பை மேலாண்மை குறித்து விளக்கி வருகின்றனர்.
இதை தொடர்ந்து, பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, ரப்பர் மற்றும் துணி வகைகள், மருத்துவக் கழிவுகள் என நான்கு வகைகளாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், காய்கறி மற்றும் பழத்தோல்கள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளையும், பிளாஸ்டிக், கண்ணாடி உள்ளிட்ட மக்காத குப்பைகளையும் தனித்தனியாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செயல் அலுவலர் புவனேஸ்வரி கூறுகையில், பேரூராட்சி பகுதிகளை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில் வார்டு வாரியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், குப்பைகளை நான்கு வகைகளாக பிரித்து வழங்கி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
