
இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குக் கொள்கலன்களுக்கு சுங்க அனுமதி பெறுவதில் கடந்த 15 நாட்களாக தாமதம் ஏற்பட்டு வருவதாக வர்த்தக துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் சுங்க முகவர்கள் உள்ளிட்டோர் கடுமையான நிதிச்சுமை மற்றும் தாமதத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
புதிய சுங்கத்துறை மென்பொருள் அமைப்பு நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, சரக்குகளை உரிய காலத்தில் அனுமதித்து வெளியேற்றுவதில் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கமாக குறுகிய காலத்தில் அனுமதி பெறும் சரக்குகள் பல நாட்களாக துறைமுகங்களில் தேங்கி கிடப்பதாகவும், சில சரக்குகளுக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்களில் சரக்குகள் நீண்ட நேரம் தேங்குவதால் டெமரேஜ், சேமிப்பு மற்றும் இதர கூடுதல் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி–இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக வர்த்தகர்கள் மற்றும் சுங்க முகவர்கள் சம்பந்தப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்த தாமதத்தால் இறக்குமதியாளர்கள், சுங்க முகவர்கள், கப்பல் நிறுவனங்கள் மற்றும் சரக்குக் கையாளும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கூடுதல் சேமிப்புக் கட்டணம், detention மற்றும் demurrage கட்டணங்கள், சரக்கு கையாளுதல் செலவுகள் அதிகரிப்பதுடன், விநியோகச் சங்கிலியிலும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சரக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சுங்கத்துறை மென்பொருள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்களை உடனடியாக ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள இறக்குமதி சரக்குகளுக்கு விரைவாக அனுமதி வழங்கவும், வர்த்தக நடவடிக்கைகள் சீராக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



