
தமிழகம் முழுவதும் நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ஒரு கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 666 ரூபாய் பணப்பரிவர்த்தனை கண்டறியப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 8 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்ட து.
மேலும், இணையவழி பணப்பரிவர்த்தனை மூலம் 19 லட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நகராட்சி ஆணையரின் வங்கிக் கணக்கில் ஒரே ஆண்டில் 20 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாய் பண பரிமாற்றம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து 7 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 7 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.
முக்கிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. செல்போன் அழைப்புகள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது ஜிபே மூலம் கணக்கில் வராத, 41 ஆயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.
