திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோட்டில் மக்கள் படும் அவஸ்தை – கண்டுகொள்ளாத நிர்வாகம்!

திண்டுக்கல் மாநகராட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தால் நல்ல முறையில் இருந்த சாலைகள் எல்லாம் நாசமாகி வருவதாக பொதுமக்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோடு மாறியுள்ளது.
இந்த சந்தை ரோட்டில் தான் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர். முன்பு நல்ல நிலையில் இருந்த இந்த சாலையை பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டிய நகராட்சி நிர்வாகம், குழாய் பதித்த பிறகு முறையாக மூடாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
மழை பெய்தால் இந்த சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சந்தைக்கு வரும் வியாபாரிகள் தங்கள் வாகனங்களை கொண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர். குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் ஒப்பந்தக்காரர்கள் அவசர அவசரமாக தோண்டிவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் சாலையை சீரமைக்க மாதக்கணக்கில் ஆகிறது. இந்த ஆமை வேகத்தால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கொந்தளிப்புடன் தெரிவிக்கின்றனர்.
எனவே மாநகராட்சி ஆணையர் உடனடியாக நாகல்நகர் சந்தை ரோட்டை நேரில் ஆய்வு செய்து பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.