
கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
திருவள்ளுவர் மாவட்டம், ஆவடி எண்ணூர் பகுதியில் காவல் ஆணையாளர் டி.செந்தில்குமார் உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எண்ணூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெள்ளை நிற கோணிப்பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஷகிலா, ராஜேஷ் ஆகிய இருவரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடமிருந்து சுமார் 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து எண்ணூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், எண்ணூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


