
சென்னை அருகே, குடிபோதையில் இருந்த இரு திருநங்கைகள் காய்கறி கடை மற்றும் துரித உணவு கடையும் அடித்தது மிட்டுமின்றி , போலீஸ் ரோந்து வாகன கண்ணாடியையும் நொறுக்கியுள்ளனர்.
எண்ணுார் அடுத்த, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை பிருந்தா. இவர் நேற்று முன்தினம் இரவு, தன் தோழிகளான அஞ்சலி உட்பட மூன்று திருநங்கையருடன் சேர்ந்து, ரதி என்பவரது காய்கறி கடைக்கு சென்றுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர்கள், ரதியிடம் தகராறு செய்து, அவரது கடையையும், அருகே உள்ள மகேஸ்வரி என்பவரது துரித உணவக கடையையும் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோதல் குறித்து விசாரித்த போது, திருநங்கை பிருந்தா ஆத்திரமடைந்து, கல்லை எடுத்து ரோந்து வாகனத்தின் மீது வீசினார். இதில், காரின் பின்புற கண்ணாடி சுக்குநுாறாக உடைந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த எண்ணுார் போலீசார், தாக்குதலில் தொடர்புடைய திருநங்கையர் பிருந்தா, அஞ்சலி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.