
தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாட்டில் துளசி மகளிர் சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்புகளுக்கு முறையாக அரசு ஒதுக்கீடு செய்த இடங்கள் 39 இதனுடன் கல்லூரி மேலாண்மை இடங்கள் 21 சேர்த்து மொத்தம் 60 இடங்கள் இக்கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் பல்கலைக்கழகம் அனுமதித்திருந்த எண்ணிக்கையை விட கூடுதலாக 36 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் முறைகேடாக சேர்த்துள்ளது. இதனால் கடந்த மே மாதம் நடைபெற்ற பருவத்தேர்வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 36 மாணவிகளுக்கு பதிவெண் வழங்கப்படாததால் அம்மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் கல்லூரி நிர்வாகம் உங்களுக்கான பதிவெண் கிடைத்துவிடும் பல்கலைக்கழகத்திடம் இது தொடர்பாக பேசிவருகிறோம், நீங்கள் அனைவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவீர்கள் என்று மாணவிகளை ஏமாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தியில் பல்கலைக்கழக ஒழுங்குமுறை விதிகள் மீறப்பட்டுள்ளதால் பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தின்படி துளசி மகளிர் சட்டக் கல்லூரி உட்பட மூன்று தனியார் சட்டக் கல்லூரிகளுக்கான இணைப்பு அங்கீகாரம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினால் துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களோடு ஒட்டுமொத்தக் கல்லூரி மாணவர்களின் கல்வியும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனையடுத்து மாணவிகள் அனைவரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வியை பாதிக்காத வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டத்தை தொடருவோம் என்று மாணவிகள் கூறியுள்ளனர். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.


