அரசு அலுவலகம் மற்றும் பேருந்து நிலைய சுவர்களில் போஸ்டர் ஒட்டுதல், குப்பை கொட்டுவதை தடுக்க சுவர்களில் ஓவியம் வரையும் பணி தீவிரம்!
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையங்கள், ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள், அரசு மருத்துவமனை கட்டிடங்கள், பூ மார்க்கெட் கட்டிடங்கள் மற்றும் பிற அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய பகுதிகளில் உள்ள சுவர்களில் அதிகளவில் தேவையில்லாத போஸ்டர்கள் ஒட்டப்படுவதும், சுவரோரம் குப்பைகளை கொட்டுவதும் தொடர்கதையாக இருந்து வந்தது. மேலும், இந்தப் பகுதிகளில் சிலர் சிறுநீர் கழிப்பது போன்ற சுகாதாரமற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
இதனை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் தற்போது புதிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தவிர்க்கவும், குப்பை கொட்டுதல் மற்றும் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காகவும் அங்கு விழிப்புணர்வு மற்றும் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
இதில் திண்டுக்கல் பகுதியை பெருமைப்படுத்தும் விதமாக மலைக்கோட்டை, பூட்டு, சிறுமலை போன்ற ஓவியங்களும், குறிப்பாக, தமிழர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் சுவர்களில் வண்ணமயமாகத் தீட்டப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியின் இந்தச் சுற்றுப்புற தூய்மை மற்றும் நகரத்தை அழகுபடுத்தும் புதிய முயற்சிக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


