செய்திகள்

54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை – நஷ்டஈடு, ஓய்வூதியம் கேட்டு 85 வயது மூதாட்டி மனு

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி உச்சிமாகாளி, பணியின்போது உயிரிழந்த தனது கணவருக்கு உரிய நஷ்ட ஈடும், ஓய்வூதியமும் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். மூதாட்டியின் கணவர் குப்புசாமி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய நிலையில், கடந்த 1972-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி நாளில் தேசியக் கொடி ஏற்றுவதற்காக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் பாய்ந்து பணியிடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவர் உயிரிழந்து 54 ஆண்டுகள் கடந்தும் பலமுறை இது குறித்து மனு அளித்தும் இதுவரை நஷ்ட ஈடு மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என உச்சிமாகாளி தெரிவித்தார். மேலும், வறுமையில் வாழ்ந்து வரும் தனக்கு, கணவரின் பணிக்கால இறப்புக்கான உரிய நஷ்ட ஈடும், அவரது பணிக்கான ஓய்வூதியமும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button