
அரியாங்குப்பம் அரவிந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த நடராஜன், சவுக்கு மரக்கன்றுகள் வாங்குவதற்காக தம்பு என்பவருடன் வாடகை காரில் தக்கோலம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வியாபாரம் தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறி, ரமேஷ் என்பவர் நடராஜனை தனியாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் நடராஜன் வீடு திரும்பாததால், அவரது மகள் புனிதா செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய ரமேஷ், நடராஜனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க ரூ . 7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து புனிதா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் டவர் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், நடராஜன் தக்கோலம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று நடராஜனை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தம்பு மற்றும் ரமேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகினர்.