செய்திகள்

ஆந்திர போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 7 விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆந்திர மாநில போலீசாரால் ஜூன் 16-ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த 7 மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க கோரி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து மீனவர் சங்க நிர்வாகி விஜேஷ் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆந்திர அரசின் நடவடிக்கையை கண்டித்தும், தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற சென்னையைச் சேர்ந்த 7 மீனவர்களின் விசைப்படகுகளை ஆந்திர மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டதாகவும், தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் ஆந்திராவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியபோது நெல்லூர் மாவட்ட ஆட்சியர் படகுகளை விடுவிக்க முடியாது என தெரிவித்ததாக விஜேஷ் கூறினார். மேலும், ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் தமிழக கடல் பகுதியில் அதிகளவில் மீன்பிடிப்பதாகவும், மீன் மற்றும் இறால் உள்ளிட்டவற்றை தமிழகத்தில் விற்பனை செய்து வருவதால் இரு மாநில மீனவர்களும் சகோதரர்களாக பழகி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 7 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்டமாக 14 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவர் சங்க நிர்வாகி விஜேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button