
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே, கோபாலபுரம் கிராமத்தில் தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறுபடை முருகன் கோயிலில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ராகுல்குமார் என்பவரும் பணியாற்றி வந்ததாகவும், அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் பணியில் இருந்தபோது செல்போனில் பேசியபடி தங்கும் பகுதிக்கு சென்ற ராகுல்குமார் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில், உடனிருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

