
லஞ்சம் கேட்ட மாமல்லபுரம் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மணன்மை ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் விவசாயிகளுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்லும் வழியில் உள்ள இடத்தை ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கி மனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் விவசாய நிலத்திற்கு செல்ல பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தானமாக வழங்கப்பட்ட பொதுபாதையும் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்து மணம்மை திமுக ஊராட்சி மன்ற தலைவரான செங்கேணி ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் நேரடியாக சென்று நியாயம் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் செங்கேணி மீது மிரட்டுவதாக புகார் அளித்த நிலையில், புகாரின் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க மாமல்லபுரம் காவல் உதவி ஆய்வாளர் பாசுராமன் செங்கேணியிடம் ரூ.50,000 லஞ்சம் கொடுக்குமாறு வலிறுத்தியுள்ளார். செங்கேணி லஞ்சம் தர மறுத்ததால் கோபமடைந்த காவல் உதவி ஆய்வாளர் செங்கேணி மீது பொய் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து மனவேதனையடைந்த செங்கேணி செங்கல்பட்டு மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் மனு அளித்துள்ளார். மேலும், இது குறித்து ரியல் எஸ்டேட் அத்துமீறலை தட்டிகேட்ட தன் மீது பொய்வழக்கு பதிவு செய்ததோடு மட்டுமில்லாமல், லஞ்சம் கேட்டு மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் பாசுராமன் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கேணி கோரிக்கை வைத்துள்ளார்.



