1950-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி அன்றைய குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின் மூலம் தலித் கிறிஸ்தவர்களுக்கான எஸ்சி (SC) உரிமை மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அந்நாளைத் ‘தலித் கிறிஸ்தவர்கள் கருப்பு தினமாக’ அனுசரித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 10 இன்றைய தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள புனித வளனார் பேராலயத்தில் கருப்பு கொடி ஏற்றியும், கையில் கருப்பு பலூன்களை வைத்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மதுரை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை தாங்கினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்தும் தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
சூழலில், சமூக நீதிக்கான பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் மற்றும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது
இதை தொடர்ந்து ஆயர் தாமஸ் பால்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் :-
1950-இல் பிறப்பிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆணைப்படி எஸ்சி பட்டியல் இந்துக்களுக்கு மட்டுமே என வரையறுக்கப்பட்டது. பின்னர் சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு இந்த உரிமை விரிவாக்கப்பட்ட போதிலும், மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கும், தலித் இஸ்லாமியர்களுக்கும் இவ்வுரிமை இன்னும் மறுக்கப்பட்டு வருகிறது. தீண்டாமை மற்றும் சமூகப் புறக்கணிப்புகளால் தலித் கிறிஸ்தவர்களும் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்குவது முறையானது என நீதிபதி ரங்நாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்தும் அது அமல்படுத்தப்படவில்லை.
நீதிமன்ற வழக்கு மற்றும் மாநில அரசின் தீர்மானம்:
தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே, தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்சி பட்டியல் உரிமை வழங்க வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதற்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் எஸ்சி பட்டியல் சட்டத்திருத்தம் நிறைவேறும் வரை, இடைக்கால நிவாரணமாகப் பிற்படுத்தப்பட்டோர் (BC) பிரிவில் தலித் கிறிஸ்தவர்களுக்கு 4.6% உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கையெழுத்து இயக்கம் மூலம் வலியுறுத்தப்பட்டது. இதேபோல், கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்பிசி (MBC) பிரிவில் உரிய இடம் வழங்கவும், வரவிருக்கும் சட்டமன்றச் சபாநாயகர் மற்றும் அமைச்சர்களிடம் நேரடியாகக் கோரிக்கை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையினக் கல்வி நிறுவனங்களில் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு முழுமையான அரசு நிதியுதவி (Aid) வழங்கப்பட வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போல, தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கும் உயர்கல்வியில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
எஃப்சிஆர்ஏ (FCRA) சட்டத்திருத்தப் பாதிப்புகள்:
மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள எஃப்சிஆர்ஏ வெளிநாட்டுப் பங்களிப்புச் ஒழுங்குமுறைச் சட்டத்திருத்தம் தொண்டு நிறுவனங்களைப் பாதிக்கும் வகையிலும், பல தசாப்தங்களாக இயங்கி வரும் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் ஆலயங்களின் செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் அமையும். இந்தச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும்.
மதச்சார்பற்ற சேவை:
கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாதி, மத பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும்—குறிப்பாகப் பெரும்பான்மையான இந்து சமயத்தைச் சார்ந்த மாணவர்களுக்கும் ஏழைகளுக்கும்—சேவையாற்றி வருகின்றன. பொய்க் குற்றச்சாட்டுகளையும் தாண்டி, சேவை மனப்பான்மையோடு மட்டுமே செயலாற்றும் தலித் கிறிஸ்தவர்களின் 75 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு அனைத்துப் பிரிவைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார்
