
திருவொற்றியூர் அரசு ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவன் தனுஷ் குமார், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 11 இளம் சிறார்கள் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்றனர். ஆறுதல் கூறிய அமைச்சர்களை சம்மந்தப்பட்ட மாணவனின் உறவினர்கள் முற்றுகையிட்டு, பள்ளிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், மாணவன் உயிரிழந்த பிறகு அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போலீசார், இதே பாதுகாப்பை பள்ளியிலேயே வழங்கியிருந்தால் தங்கள் பிள்ளை உயிரிழந்திருக்க மாட்டான் என உறவினர்கள் ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.